சரஸ்வதி பூஜை


நவராத்திரி வாரத்தில் வரும் சரஸ்வதி விரத பூஜை எதிர்வரும் 12.10.2018 வெள்ளிக்கிழமையன்று வாரதுன் கோர்ட் மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் சரஸ்வதி தேவிக்கு நைவேத்தியங்கள் படைத்து குழந்தைகளும் பெரியோரும் தோத்திரங்கள், பாமாலை என்பன இசைத்து பக்தி சிரத்தையுடன் அம்பாளை வழிபடுவர்.


வரலக்ஷ்மி பூஜை போன்று சரஸ்வதி பூஜையும் பொது உபயமாக நடைபெற இருப்பதால் அடியார்கள் அனைவரும் தயைகூர்ந்து தம்மால் இயன்றளவு இறைபணி, உபயகாரியம் என்பவற்றில் ஈடுபட்டு மேற்படி பூஜை சிறப்பான முறையில் நிகழ்ந்தேற ஒத்துழைக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.


சரஸ்வதி பூஜை நாளில் மண்டபத்தில் மேலதிக உதவிகள் தேவைப்படுவதால் அங்கு தொண்டாற்ற விரும்பும் அடியார்கள் 17:30 மணியளவில் மண்டபத்திற்கு வந்து ஆயத்த வேலைகளில் எம்முடன் இணைந்து கொள்ளலாம். தீபங்களுக்கு திரியிடுதல், சுவாமிப்படத்தை அலங்கரித்தல், பூச்சரம் தொடுத்தல் முதலான பல்வேறு பணிகளில் உங்கள் உதவி தேவைப்படுகிறது.

 

நவராத்திரி வாரத்தில் குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளில் சிறார்களுக்கு ஏடு தொடக்குவது சாலச் சிறந்தது. எனவே தமது குழந்தைகளுக்கு ஏடு தொடக்க விரும்பும் பெற்றோர் நிர்வாக அங்கத்தவர்களுடன்  முன் கூட்டியே தொடர்பு கொண்டு அதற்கான ஆயத்தங்களை செய்துகொள்ளவும்.


அடியார்கள், முக்கியமாக சிறார்கள் சமய சம்பந்தமான சிறு சொற்பொழிவு, சரஸ்வதி பாடல்கள், தோத்திரங்கள் என்பவற்றை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

சைவ சமய நூல்கள், ஆகமங்கள், திருமறைகள், ஆன்றோர் வாக்கு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதும் முற்றிலும் இந்து சமயத்தைப் பற்றியதும் இறைவனின் புகழையும் மேன்மையையும் எடுத்துக் கூறுவதுமான நிகழ்வுகள் மட்டுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.


 

பொழுதுபோக்கு, கேளிக்கை அம்சங்களை உள்ளடக்கிய அல்லது அது சார்ந்த துறைகளுடன் தொடர்புள்ளதுமான எந்த நிகழ்ச்சிகளும் இப்பூஜை நிகழ்வில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


கடந்த கால அனுபவங்களின்படி இப் பூஜையின்போது நேரப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு ஆதலால் மிக நீண்ட உரைகளையும் பாடல்களையும் தவிர்த்துக் கொள்ளவும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 3-5 நிமிடங்கள் தரப்படும். எனவே நீங்கள் வழங்கப்போகும் நிகழ்ச்சி பற்றிய விபரங்களை முன்கூட்டியே இந்து மாமன்ற நிர்வாகத்தினருக்குத் தெரியப்படுத்துவது நன்று.


பெற்றோர்கள் தமது குழந்தைகளை ஓடியாடித் திரியாதபடி அவர்களை தம்முடன் கூடவே வைத்திருந்து பூஜையின்போது அமைதி காக்கும்படி வேண்டப்படுகின்றீர்கள்.